தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்!
ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம
பாராயணம் ஆனது.
புரட்டாசி மாதம்
என்பதாலோ அல்லது
புத்திக்குத் தோன்றியதாலோ…!
சஹஸ்ரநாம சங்கதிகளை சொல்லிக் கொண்டே வந்தபோது, ஒரு இடத்தில் சற்று
மனது நின்று
நிதானித்து… ஸ்ரீகிருஷ்ணரின் செயல்களை
அசைபோட்டது!
அது எதுவென்றால்…
அமானீ மானதோ
மான்யோ லோகஸ்வாமி த்ரிலோக த்ருத்…
இந்த இடத்தில்
சற்று நின்று
புத்தி எங்கெங்கோ சஞ்சாரம் செய்தது. மானீ
என்றால், மானம்
உள்ளவன்
அமானீ – மானம்
இல்லாதவன்; என்றால்
கிருஷ்ணன் மானம்
இல்லாதவனா?
ஏன்டா டேய்..
உனக்கு வெக்கம்
மானம் சூடு
சொரணை… ஏதாவது
இருக்கா? என்று
நாம் கேட்பது
போலா இது?
அதுவும் பகவானைப்
போற்றிப் பாடும்
சஹஸ்ரநாம வழிபாட்டில்?
சரி.. அடுத்தது.. மானதோ -என வருவது. அதாவது மானம் கொடுப்பவன். அதெப்படி..? மானம் இல்லாதவன் அடுத்தவனுக்கு மானம் கொடுப்பானா?
அடுத்து… மான்ய..
என்று மானத்தை
விட்டு நிற்பது…!
ஸ்ரீகிருஷ்ணனின் லீலாவிநோதங்களைச் சிந்தித்துக் கொண்டு வந்தால், இந்த
மூன்று பதத்துக்கும் பொருள் விளங்கும்.
பகவான் அனாத்ம
வஸ்துகளில் ஆத்ம
அபிமானம் இல்லாதவர். சொல்லப் போனால் தன்
கௌரவத்தை நினைக்காதவர். அதுவும்
பக்தர்களின் விஷயத்தில்!
தன் பக்தன்
மிகவும் துன்பப்
படுவதைப் பார்த்தால், பகவானுக்கு மனம் கொள்ளாது.. தன் நிலையிலிருந்து இறங்கி, இரங்கி… பக்தனின் உயர்வைச்
சிந்திப்பார்.
பாண்டவர்களின் சிரமத்தைக் கண்டு மனம் வருந்தி, அவர்களுக்காக தூது சென்று, துரியோதனன் அவையில் அவமானப்
பட்டு, தனது
மானத்தைப் பெரிதெனக் கொள்ளாமல், தன் சகாக்களின் மானத்தைக் காக்க முனைந்தார்.
அடுத்து… பக்தனுக்கு உரிய மானத்தைக் கொடுப்பவர். பெற்றுத் தருபவர். பக்தனுக்கு கௌரவம் அளிப்பவர். பக்தியில்லாதோரின் கர்வத்தைக் கண்டிப்பவர்.
திரௌபதிக்கு வஸ்திரம்
கொடுத்து மானம்
காத்ததும், அன்னப்
பாத்திரத்தில் கீரைப்
பருக்கை இருக்க
வைத்து தாம்
உண்டு ஏப்பம்
விட்டு துர்வாசர் சாபத்தில் இருந்து பாண்டவரைக் காத்ததும் அப்படித்தான்!
அடுத்து, தாமே
பூஜிக்கத் தகுந்தவராக இருந்தாலும், தம் பக்தருக்காக மானத்தை விட்டு இறங்குபவர்.
தர்மர் ராஜசூய யாகம் செய்தார். அதில் அக்ரபூஜையை கிருஷ்ணரே ஏற்றுக் கொண்டார் என்றாலும், அதன் பகுதியாக யாகத்துக்கு வந்தவர்களின் கால்களைக் கழுவும் பணியைத் தாமே ஏற்றுக் கொண்டார்!
அதாவது… அமானீ மானதோ மான்ய: இப்படி எல்லாம் இருந்ததால்தான், அவர் லோகஸ்வாமி என்று கொண்டாடப் படுகிறார். அதாவது, லோகஸ்வாமி த்ரிலோக த்ருத்… மூன்று லோகங்களுக்கும் ஸ்வாமியாக!
இது ஏதோ பக்தன் – பகவான் கதை என்று கதைத்துவிட்டு கைகழுவி விட்டுச் சென்றுவிடாமல், நமக்கான பாடம் என்ன என்று யோசித்தால்…
வழக்கம்போல், மேலாண்மைத் தத்துவம் மனத்தில் முட்டுகிறது.
ஒரு தலைவன் / அல்லது தலைமைப் பொறுப்பில் உள்ளவன், தனக்கு ஏற்படும் மான அவமானங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், தன் கீழ் பணிபுரியும், தன்னையே நம்பியிருக்கும் இளநிலைப் பணியாளர்களின் மானத்தைப் பெரிதென எண்ணிக் காக்க முற்பட வேண்டும். தன்னுடைய மானம் பார்த்துச் செயல்படுவது, தலைவனுக்கான செயல் அல்ல.! அப்படி செயல்பட்டால், தொண்டர்களின் நம்பிக்கையை அவன் விரைவில் இழந்துவிடுவான். அவனுக்கான தலைமைத்துவம் தகர்ந்துவிடும்.
தொண்டனின் மானம் காக்க, தன் மானத்தை விட்டுக் கொண்டு செயல்படுவனாயிருந்தால், ஸ்ரீகிருஷ்ணனின் வலிமையை அவன் பெறுவான்! அவனே தலைவன் என்று கொண்டாடப் படுவான்.
0 Comments